மணமக்களும்,மணவிழா அழைப்பிதழும்


01.06.2006 அன்று நடைபெறவிருக்கும்
மகளின் திருமணத்திற்கு அனைத்து
‘தமிழ்மண’அன்பர்களையும்
அன்போடு அழைக்கின்றேன்
தமிழ்மண அன்பர்களின்
தரிசணம் வேண்டும்....!
நேச நெஞ்சங்களின்
வாழ்த்துக்கள் வேண்டும்....
மகளுக்காக.......
நேற்றுபோல் தோன்றுதடா..!
சின்ன அணில்குட்டியாய்!
சிறகுமுளைக்காத சிட்டுகுருவியாய்!
உன் தாயின் அரவணைப்பில்
தூக்கத்தில் சிரிப்பாயே!
ஒரு கையளவு உனை தூக்கிக்கொஞ்சிய
நாட்கள் நேற்றுபோல் தோன்றுதடா...
நிகழ்காலம்போல் நீண்டு தெரியாமல்
கடந்தவைகள் கனவுபோல்....
எதனால்..!
பொம்மையாய் துள்ளித்திரிந்தவள்
பெண்மை சூடப்போகிறாள்
பொம்மைப்பாத்திரங்களில் சோறாக்கி
கொடுத்தவளே!
சமையலறை திசையாச்சும்
அறிவாயா..!
பாவாடைப்பருவத்தில் வெற்றிலை
மெல்லும் பாட்டியானாய்..
சின்னச்சின்ன பொய்களால் அம்மாவின் அடிகாண்பாய்...
மெல்லச்சிரித்து தாயின்மடி சேர்வாய்....
இறைவனுக்கு பொறாமையோ..பொறுமையின்மையோ...
தாய்ப்பறவையைத் தத்தெடுத்துக்கொண்டான்
சொந்தத்தின் நட்பும்,நட்பின் சொந்தமும் உனை
சீராட்ட மீண்டும் அம்மாவின் மடிகண்டாய்..
அம்மாவின் கோபமும் அப்பாவின் சோம்பலும்
ஒன்றான செல்லமே
இரண்டையும் இங்கேயே விட்டுப்போ...
கொஞ்சம் மிரட்டிட கண்ணீர் சிந்துவாய்
பாலைக்கூட முகர்ந்தபின் அருந்துவாய்
என் சுண்டுவிரள் பிடித்து நடந்த கைகள்
தோளோடு கைபோட திருவிழா வருது
பாசத்தை நேசத்தை பங்குபோடத்தெரியாதவளே
பங்கு போட ஆள் வருது...
மகளாய் தாயாய்
எல்லோரும் விரும்பும் அன்புத் தோழியாய்
கோபத்தில் அமைதியாய்
இன்பமெனில் மத்தாப்பாய்
சொல்லால் சுடாமல் யாரையும்
குறையையும் நிறையாக்க விழித்திருப்பாய்!
உன் நிழல்களிலே வசந்தங்கள் உருவாக்கு....
நீ இருக்குமிடம் ஆனந்த இசைப்பாட்டு...
தாயின் கனவுகளை
சூழ்ந்தார் வாழ்த்துகளை
அன்பின் வேள்விதனை
நட்பின் மிகுசுகத்தை
உரிமையாய் கொண்டாடு
உண்மை இன்பம் உன்னோடு....
கர்வமின்றி கடந்திடு காலத்தை
நலும் நலம் கிடைத்திடும் காலத்தில்...