பிஞ்சு பழுத்ததோ?!
``எத்தனை தரம் சொன்னாலும் கேட்க மாட்டா’’ வசை பாடியபடியே அம்மா தூங்கிக் கொண்டிருந்த மாலாவின் பாவாடையை கால்வரை இழுத்துவிட்டாள். ஒரே மகள் என்பதால் ஏகச் செல்லம் ,தூக்கத்தில்கூட ஒரு கால் எப்போதும் அப்பாவின் இடுப்பில்தான் கிடக்கும்.
`பத்தாம் க்ளாஸ் வந்தாச்சு, இன்னும் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் ஆம்பிள்ளைப் பசங்க கூட கில்லி விளையாடறா, தோட்டக்காரனைப் பின்னால் வைச்சுகிட்டு சைக்கிள் விடப் பழகறா. இதையெல்லாம் நீங்க கண்டுக்கறதே இல்லை, கொஞ்சம் அதட்டி வைக்கலாமில்லையா’ என்று ராஜாவிடம் புலம்பினாள் கவிதா.
`சின்னக் குழந்தையைப் போய் இதெல்லாம் சொல்லி குழப்பாக்கூடாது’ன்னு சுருக்கமாகச் சொல்லிட்டு ஆபீஸ் போயிட்டான்.
சாயங்காலம் வரும்போது தூரத்திலிருந்து பார்த்த மாலா ஓடிவந்து `அப்பா அப்பா ஐஸ்க்ரீம் சாப்பிடப் போலாம்பா’ ன்னு தோளில் மாலையாகத் தொங்கினாள். கவிதா சொன்னதுபோல் சில விஷயங்கள் சொல்லித்தர வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டு பூங்கரங்களை மெதுவாக விலக்கினான், பதிலேதும் சொல்லாமல். அந்த சின்ன பாராமுகத்தைக்கூடத் தாங்க முடியாதவளாய் விருட்டென்று கையை இழுத்துக்கொண்டு ஓடி விட்டாள்.
கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்த பிறகு, மகளை சமாதானம் செய்யிற மாதிரி,` வாடா, ஐஸ்க்ரீம் கடைக்குப் போகலாம்’னு சொன்னான். பிடிவாதத்தில் அம்மாவைக் கொண்டிருந்தவள் பதிலும் சொல்லாமல் உம்மென்றே இருந்தாள். இரவு படுக்கும்போது அப்பா ஒரு பக்கம், அம்ம ஒருபக்கம் படுக்க இருவர்மீதும் கால் போட்டு படுக்கிறா ஆசாமி, ஒருக்களிச்சு அம்மாவுக்கு அந்தப் பக்கம் படுத்துகிட்டா. ராஜா எவ்ளவோ கொஞ்சியும் கூட சமாதானம் ஆகவில்லை.
நடுராத்திரி பக்கத்தில் ஏதோ சலனம் தெரிந்து லைட் போட்டுப் பார்த்தான். மாலா தேம்பிக் கொண்டிருந்தாள். ஆதரவாக பட்ட அப்பாவின் கையசைவில் ஓடிவந்து ஒட்டிக்கொண்டாள்.
மறுநாள் முழுக்க அவளின் அழுமூஞ்சித்தனம் பெருமைக்காகக் கிண்டலடிக்கப் பட்டது. அவளும் சளைக்காமல், எங்கப்பாவுக்கு நான் பக்கத்திலே இல்லாட்டி தூக்கமே வராது, அதான்’ ன்னு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டாள்.
யார் கண் பட்டதோ, நாலே மாதத்தில் பிரளயமே புகுந்துவிட்டது அந்த சின்னஞ்சிறு குடும்பத்தில். கவிதாவுக்கு சாதாரண தலைவலியாக ஆரம்பித்த நோவு மூளையில் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரியும் வீடுமாக ஒரே அலைச்சல். பொதுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்ததால் மாலா பாட்டியின் பராமரிப்பில் தற்காலிகமாக விடப்பட்டாள். இடையிடையே அப்பா வரும் நாட்களில் அவனது ஆறுதலான அண்மைக்கு ஏங்குபவளாக ஓடிவருவாள்.
இடையில் ஒருநாள் அம்மவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போனாள். மகாலட்சுமி மாதிரி தழையத் தழைய பின்னலில் பூச்சூட்டி வலம் வரும் அம்மா, மழுங்க மொட்டையடிக்கப்பட்டு கை மூக்கு என்று எல்லா இடங்களிலும் ட்யூப் சொருகிப் படுத்திருந்த கோலம் அவளை மிகவும் பாதித்து விட்டது. திடீரென்று முதிர்ச்சி வந்துவிட்டதுபோல் அமைதியாகிவிட்டாள்.
மறுபடி அம்மாவைப் பார்க்கப் போகவே இல்லை. அடுத்த மாத இறுதிக்குள்ளாகவே அம்மா நிரந்தரமாகப் ப்ரிந்துவிட்டாள். அப்பாவைப் பார்க்கவே சகிக்கவில்லை. பாதி ஆளாகிவிட்டார். எல்லாக் களேபரங்களும் ஓய்ந்து வெறுமையான அடுப்படியை வெறித்துக் கொண்டிருந்த போது பாட்டி மெதுவாக அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்` மாலா கொஞ்ச நாள் எங்க கூட இருக்கட்டும் மாப்பிள்ளை’ அப்பா முடியாது என்னுடனே இருக்கட்டுமென்று சொல்லுவார்னு நினைச்சா. ஆனா அப்பாவும் சரின்னு சொல்லிட்டார்.
ஏதோ புரிந்தது போலும் இருந்தது, ஆனால் எல்லாமே குழப்பமாகவும் இருந்தது. இனிமேல் என்னைக்குமே அப்பா இடுப்பில் கால் போட்டுத் தூங்க முடியாது என்ற உண்மை மட்டும் புரிந்தது. இதற்காகவாவது சின்னக் குழந்தையாக இருந்திருக்கலாமோன்னு முதல்தரமாகத் தோன்றியது. மலரும் முன்பே முதிர்ந்துவிட்டதுபோல் ஆனாள் அந்தப் பிஞ்சு!